வேறு மொழிகள் | தமிழ்ப் பகுதி | ஆங்கிலப் பகுதி
கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்
(ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்)
தமிழாக்கம்: மு.சிவலிங்கம்
அத்தியாயம்-1
[கற்பனாவாத சோஷலிசம்]
நவீன சோஷலிசமானது அதன் சாரப்பொருளில், ஒருபுறம், உடைமையாளர்களுக்கும் உடைமையற்றவர்களுக்கும் இடையே, முதலாளிகளுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் இடையே நிலவிவரும் வர்க்கப் பகைமைகளையும், மறுபுறம், உற்பத்தியில் நிலவிவரும் அராஜகத்தையும் அறிந்து கொள்வதன் நேரடியான விளைவாகும். ஆனால், நவீன சோஷலிசமானது, அதன் கொள்கை வடிவில், 18-ஆம் நூற்றாண்டின் மாபெரும் ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள் வகுத்தளித்த கோட்பாடுகளின், மிகுந்த தர்க்கரீதியான ஒரு நீட்சி என்பதுபோல, பார்த்தவுடன் வெளித்தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அதன் வேர்கள் பொருளாயத ரீதியிலான பொருளாதார உண்மைகளில் எவ்வளவுதான் ஆழமாகப் பதிந்திருந்த போதிலும், எந்தவொரு புதிய கொள்கையையும் போலவே, நவீன சோஷலிசமும், தொடக்கத்தில், தயாராகத் தன் கைக்குக் கிடைத்த அறிவுத்துறை சார்ந்த கருத்துகளில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
ஃபிரெஞ்சு நாட்டில், மனிதர்களின் மனத்தை, வரப்போகும் புரட்சிக்காகத் தயார்செய்த அந்த மாமேதைகள், தாங்களே தீவிரப் புரட்சியாளர்களாகவும் திகழ்ந்தனர். எப்படிப்பட்டதாக இருப்பினும், எந்த வகையான புறநிலை அதிகாரத்தையும் அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மதம், இயற்கை விஞ்ஞானம், சமுதாயம், அரசியல் நிறுவனங்கள் – இவை ஒவ்வொன்றுமே தயவு தாட்சண்யமற்ற விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டன: அவை ஒவ்வொன்றும், பகுத்தறிவின் தீர்ப்பு–மேடை முன்னே தன் இருப்பை நியாயப்படுத்தியாக வேண்டும் அல்லது இல்லாது ஒழிந்தாக வேண்டும். பகுத்தறிவுக்கு உகந்தது என்கிற ஒன்றே அனைத்துக்கும் அளவுகோல் ஆயிற்று. ஹெகல் (Hegel) கூறுவதுபோல, உலகம் தலையால் நின்ற காலம்[26] அது. [என்ன பொருளில் எனில்] முதலாவதாக, மனிதனது தலையும், அதன் சிந்தனையால் வந்து சேர்ந்த கோட்பாடுகளுமே அனைத்து மனிதச் செயலுக்கும், மனிதக் கூட்டமைப்புக்கும் அடிப்படையெனக் கருதப்பட்டது என்னும் பொருளிலும், நாளடைவில் இதோடன்றி இந்தக் கோட்பாடுகளுக்கு முரணாயிருந்த எதார்த்தம் உண்மையிலேயே தலைகீழாக மாற்றப்பட வேண்டியிருந்தது என்னும் விரிவான பொருளிலும். அன்று நிலவிய சமுதாயம், அரசாங்கம் ஆகியவற்றின் ஒவ்வொரு வடிவமும், பழைய மரபுவழிக் கருத்தமைவு ஒவ்வொன்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததெனக் குப்பைக் குழியில் வீசி எறியப்பட்டது. இதுநாள்வரை உலகம், தப்பெண்ணங்களால் மட்டுமே, தான் வழிநடத்தப்பட இடம்கொடுத்து விட்டது. கடந்த காலத்தவை அனைத்துமே அனுதாபத்துக்கும் அவமதிப்புக்குமே உகந்தவை. இப்போதுதான் முதன்முறையாக, [இருளகன்று] பகலின் ஒளி, பகுத்தறிவின் ஆட்சி தோன்றியது. இது முதற்கொண்டு, நித்தியமான உண்மை, நித்தியமான நீதி, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட சமத்துவம், விட்டுக்கொடுக்க முடியாத மனித உரிமைகள் ஆகியவற்றின் மூலம், மூட நம்பிக்கை, அநீதி, தனிச்சலுகை, ஒடுக்குமுறை ஆகியவை அகற்றப்பட வேண்டும்.
இந்தப் பகுத்தறிவின் ஆட்சி என்பது முதலாளித்துவ வர்க்கத்தின் மிகைப்படுத்திக் கூறப்பட்ட ஆட்சியே அன்றி வேறொன்றுமில்லை; இந்த நித்தியமான நீதி என்பது முதலாளித்துவ நீதியாகத் தன்னை நிறைவேற்றிக் கொண்டது; இந்தச் சமத்துவம் என்பது சட்டத்தின் முன்பான முதலாளித்துவச் சமத்துவமாகக் குறுகிவிட்டது; முதலாளித்துவச் சொத்துடைமை என்பது இன்றியமையாத மனித உரிமைகளில் ஒன்றாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது; பகுத்தறிவின் அரசாங்கம், ரூஸோவின் (Rousseau) சமூக ஒப்பந்தம்[27] (Contrat Social) ஒரு ஜனநாயக முதலாளித்துவக் குடியரசாகத்தான் நடைமுறைக்கு வந்தது, அது அவ்வாறுதான் நடைமுறைக்கு வர முடியும். இவற்றையெல்லாம் இன்று நாம் அறிவோம். 18-ஆம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்களால், அவர்களின் சகாப்தம் அவர்களுக்கு விதித்த வரம்புகளுக்கு அப்பால், அவர்களின் முன்னோர்கள் சென்ற அளவுக்கும் அதிகமாகச் செல்ல முடியவில்லை.
ஆனால், நிலவுடைமைப் பிரபுக்களுக்கும், சமுதாயத்தின் ஏனைய அனைத்து பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட நகரத்தாருக்கும் இடையேயான பகைமையுடன் பக்கம் பக்கமாகவே, சுரண்டுவோருக்கும் சுரண்டப்படுவோருக்கும் இடையேயான, பணக்காரச் சோம்பேறிகளுக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கும் இடையேயான பொதுவான பகைமையும் நிலவி வந்தது. இந்தச் சூழ்நிலைதான், முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகள் தாங்கள் தனியொரு வர்க்கத்தை அல்லாமல், மனிதகுலம் முழுவதையுமே பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதைச் சாத்தியமாக்கியது. அது மட்டுமன்று. முதலாளித்துவ வர்க்கம் தான் தோன்றியது முதலே, அதன் எதிரிணைச் சக்திக்கும் சேர்த்துப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் இல்லாமல் முதலாளிகள் நிலவ முடியாது. மத்திய கால கைவினைக் குழும நகரத்தார் நவீன முதலாளியாக வளர்ச்சியுற்ற அதே விகிதத்தில் கைவினைக் குழுமப் பயிற்சியாளரும், கைவினைக் குழுமங்களுக்கு வெளியே இருந்த நாள்கூலி வேலையாளும் பாட்டாளியாக வளர்ச்சியுற்றனர். மொத்தத்தில், முதலாளித்துவ வர்க்கத்தினர் நிலவுடைமைப் பிரபுக்களுடனான தங்களின் போராட்டத்தில், அக்காலத்திருந்த பல்வேறு தொழிலாளி வர்க்கங்களின் நலன்களையும் சேர்த்துத் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ள முடிந்தது. என்றாலும், நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த, ஓரளவு வளர்ச்சி பெற்ற வர்க்கத்தின் சுயேச்சையான கொந்தளிப்புகள், ஒவ்வொரு மாபெரும் முதலாளித்துவ இயக்கத்தின்போதும் இருக்கவே செய்தன. எடுத்துக் காட்டாக, ஜெர்மன் மதச் சீர்திருத்தத்தின் போதும், விவசாயிகளுடைய போரின் போதும் போராடிய அனாபாப்டிஸ்டுகள்[28] (Anabaptists), அவர்களின் தலைவராகிய தாமஸ் முன்ஸேர் (Thomas Munzer), மாபெரும் ஆங்கிலப் புரட்சியில் சமன்வாதிகள்[29] (Levellers), மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியில் பாபெஃப் (Babeuf) ஆகியோரைச் சொல்லலாம்.
இன்னமும் வளர்ச்சி பெறாத ஒரு வர்க்கத்தின் இந்தப் புரட்சிகர எழுச்சிகளுக்குப் பொருத்தமான கொள்கைவழி விளக்கங்களும் முன்வைக்கப்பட்டன. 16-வது, 17-வது நூற்றாண்டுகளில் [முன்வைக்கப்பட்ட] இலட்சிய சமுதாய நிலைமைகள் பற்றிய கற்பனாவாதச் சித்திரங்கள்[30], 18-வது நூற்றாண்டில் (மொரெல்லி (Morelly), மாப்லீ (Mably) ஆகியோர் முன்வைத்த) உண்மையான கம்யூனிசத் தன்மை வாய்ந்த கொள்கைகள் [அவ்வாறானவை]. சமத்துவத்துக்கான கோரிக்கை இனி அரசியல் உரிமைகளுக்கு மட்டும் என வரம்பிடப்பட்டதாக இருக்கவில்லை. தனிநபர்களின் சமூக நிலைமைகளுக்கும் அக்கோரிக்கை நீட்டிக்கப்பட்டது. ஒழிக்கப்பட வேண்டியவை வெறும் வர்க்கச் சலுகைகள் மட்டுமல்ல, வர்க்கப் பாகுபாடுகளே ஒழிக்கப்பட்டாக வேண்டும் [என்று கோரிக்கை வைக்கப்பட்டது]. துறவு மனப்பான்மை கொண்ட, வாழ்வின் இன்பங்களை அனைத்தையும் நிராகரிக்கின்ற, ஆடம்பரமற்ற ஸ்பார்ட்டானிய எளிமை வாய்ந்த ஒரு கம்யூனிசமே இந்தப் புதிய போதனையின் முதலாவது வடிவமாக இருந்தது. அதன்பிறகு வந்தனர் மூன்று மாபெரும் கற்பனாவாதிகள் (Utopians): பாட்டாளி வர்க்க இயக்கத்துடன் கூடவே நடுத்தர வர்க்க இயக்கமும் இன்னமும் ஓரளவு முக்கியத்துவம் கொண்டது எனக் கருதிய, சான்-சிமோன் (Saint-Simon); முதலாளித்துவ உற்பத்தி மிகவும் வளர்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டில், அதனால் தோற்றுவிக்கப்பட்ட பகைமைகளின் தாக்கத்தில், வர்க்கப் பாகுபாட்டினைத் திட்டமிட்டு நீக்குவதற்காக, ஃபிரெஞ்சுப் பொருள்முதல்வாதத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்தித் தம் பரிந்துரைகளை வகுத்தளித்த ஃபூரியேவும் ஓவனும் (Fourier and Owen).
மூவருக்கும் பொதுவான ஒன்று உள்ளது. இவர்களில் எந்த ஒருவரும், இக்கால கட்டத்தில், வரலாற்று ரீதியான வளர்ச்சி தோற்றுவித்த அந்தப் பாட்டாளி வர்க்கத்தினுடைய நலன்களின் பிரதிநிதியாகத் தோன்றவில்லை. ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களைப் போலவே இவர்களும், தொடக்கச் செயல்பாடாக, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை விடுவிக்கப் போவதாகச் சொல்லிக் கொள்ளவில்லை; ஆனால், மனிதகுலம் முழுவதையுமே உடனடியாக விடுவிக்கப் போவதாய்க் கூறிக் கொள்கின்றனர். அவர்களைப் போலவே இவர்களும், பகுத்தறிவின் ஆட்சியை, நித்தியமான நீதியின் ஆட்சியைக் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் இவர்கள் காண விரும்பும் ஆட்சிக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள் கூறிய ஆட்சிக்கும் இடையே, விண்ணுலகுக்கும் மண்ணுலகுக்கும் இடையேயான வேறுபாடு உள்ளது.
நம்முடைய இம்மூன்று சமூகச் சீர்திருத்தவாதிகளுக்கும், ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்களின் கோட்பாட்டு அடிப்படையில் அமைந்த முதலாளித்துவ உலகம், நிலப்பிரபுத்துவத்தையும் சமுதாயத்தின் அனைத்து முந்தைய கட்டங்களையும் போன்று, அதே அளவுக்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவும் அநீதியானதாகவும் இருக்கிறது. ஆகவே, அவற்றைப் போலவே குப்பைக் குழிக்குப் போகத் தயாராக உள்ளது. தூய பகுத்தறிவும் நீதியும் இதுநாள்வரை உலகில் ஆட்சி புரியவில்லை எனில், மனிதர்கள் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே அதற்கான காரணம். இப்போதைய தேவை என்னவெனில், மேதமைமிக்க ஒரு தனிமனிதர். அப்படிப்பட்டவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார்; உண்மையை அவர் புரிந்து கொள்கிறார். அவர் இப்போது உதித்தெழுந்துவிட்டார், உண்மை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது வரலாற்று ரீதியான வளர்ச்சி என்னும் தொடர் சங்கிலி நிகழ்வுகளில், அவசியத்தின் காரணமாக நிகழ்ந்த, தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு அன்று. வெறுமனே இதுவொரு மகிழ்ச்சியான விபத்தே ஆகும். 500 ஆண்டுகள் முன்னதாகவும் இவர் பிறந்திருக்க முடியும். அப்படிப் பிறந்திருப்பின், அவர் மனிதகுலத்தை இந்த 500 ஆண்டுகாலப் பிழை, பூசல், துயரம் இவற்றிலிருந்து காப்பாற்றியிருக்கலாம்.
புரட்சியின் முன்னோடிகளான 18-ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சுத் தத்துவ அறிஞர்கள், எவ்வாறு இருப்பவை அனைத்துக்குமான ஒரே நீதிபதியாக, பகுத்தறிவுக்கு அறைகூவல் விடுத்தனர் என்பதை நாம் பார்த்தோம். பகுத்தறிவு பூர்வமான ஓர் அரசு, பகுத்தறிவு பூர்வமான [ஒரு] சமுதாயம் நிறுவப்பட வேண்டும்; நித்தியமான பகுத்தறிவுக்கு முரணாகச் செல்லும் அனைத்தும் ஈவிரக்கமின்றி ஒழிக்கப்பட வேண்டும் [என்பது அவர்களின் கருத்து]. உண்மையில் இந்த நித்திய பகுத்தறிவு என்பது, எதார்த்தத்தில், அப்போதுதான் முதலாளியாகப் பரிணமித்துக் கொண்டிருந்த 18-ஆம் நூற்றாண்டுக் குடிமகனின் இலட்சிய பூர்வமான புரிந்துணர்வே அன்றி வேறல்ல என்பதையும் நாம் கண்டோம். இந்தப் பகுத்தறிவு பூர்வமான சமுதாயத்தையும் அரசாங்கத்தையும் ஃபிரெஞ்சுப் புரட்சி நடைமுறைப்படுத்திக் காட்டியது.
ஆனால், புதிய சூழலின் நிலைமைகள் முந்தைய நிலைமைகளுடன் ஒப்பிடுகையில், போதுமான அளவு பகுத்தறிவுக்கு உகந்ததாக இருந்த போதிலும், எந்த வகையிலும் முற்றிலும் பகுத்தறிவுக்கு உகந்த ஒன்றாக இல்லை என்பது தெரிய வந்தது. பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த அரசு முழுமையாகத் தகர்ந்துவிட்டது. ரூஸோவின் சமூக ஒப்பந்தம் பயங்கர ஆட்சியில்[31] தன் நிறைவேற்றத்தைக் கண்டது. தங்களின் அரசியல் ஆற்றலில் நம்பிக்கை இழந்துபோன முதலாளித்துவ வர்க்கத்தினர், [பயங்கர ஆட்சியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள], முதலில் நெறியாளர் குழுவின்[32] ஊழலிலும், முடிவில் நெப்போலியனியக் கொடுங்கோன்மையின் அரவணைப்பிலும் அடைக்கலம் புகுந்தனர். உறுதியளிக்கப்பட்ட நித்திய சமாதானம், நாடு பிடிப்பதற்கான ஒரு முடிவில்லா யுத்தமாக மாறியது. பகுத்தறிவின் அடிப்படையில் அமைந்த சமுதாயமும் இதே கதிக்கு ஆளானது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான பகைமை, பொதுவான செல்வச் செழிப்பில் கரைந்துபோவதற்கு மாறாக, இப்பகைமையை ஓரளவுக்குத் தணித்துவந்த கைவினைக் குழுமச் சலுகைகளும் பிற சலுகைகளும் நீக்கப்பட்டதாலும், திருசபையின் அறக்கட்டளை நிறுவனங்கள் நீக்கப்பட்டதாலும், மேலும் கடுமையாகிவிட்டது. நிலப்பிரபுத்துவத் தளைகளிலிருந்து விடுபட்ட ”சொத்துடைமைச் சுதந்திரம்” (freedom of property), இப்போது உண்மையாகவே கைவரப் பெற்றது[!]. இந்தச் சுதந்திரம், சிறு முதலாளிகளுக்கும், சிறு [நில] உடைமையாளர்களுக்கும், பெரும் முதலாளிகள், பெரும் நிலப்பிரபுகளின் மேலாதிக்கத்துக்கான போட்டியின் பிடியில் நசுக்கப்பட்டு, தங்களின் சொற்பச் சொத்துகளை இந்த மாபெரும் பிரபுக்களுக்கு விற்பதற்கான சுதந்திரமாக மாறிப்போனது. இவ்வாறாக, சிறு முதலாளிகளையும், சிறு விவசாய உடைமையாளர்களையும் பொறுத்தவரை, ”சொத்துடைமைச் சுதந்திரம்” (freedom of property) என்பது “சொத்துடைமையிலிருந்து சுதந்திரம்” (freedom from property) என ஆகிப்போனது. முதலாளித்துவ அடித்தளத்தின் மீது ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, சாதாரண உழைக்கும் மக்களின் வறுமையையும் துயரையும் சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளாக ஆக்கியது. கார்லைல் (Carlyle) அவர்களின் சொற்களில் கூறுவதெனில், மேலும் மேலும் பணப் பட்டுவாடாதான் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயான ஒரே உறவு என்று ஆகிப்போனது. குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. முன்பெல்லாம் நிலப்பிரபுத்துவ ஒழுக்கக் கேடுகள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாண்டவமாடின. அவை அடியோடு ஒழிக்கப்படாவிட்டாலும், இப்போது அவை எப்படியோ பின்னிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில், இதுநாள்வரை இரகசியமாகச் செயல்பட்டுவந்த முதலாளித்துவ ஒழுக்கக் கேடுகள், அவற்றைவிட ஆடம்பரமாகத் தழைத்தோங்கத் தொடங்கின. வணிகம் மேலும் மேலும் பெரிய அளவுக்கு மோசடியாக ஆனது. புரட்சிகர முழக்கமான ”சகோதரத்துவம்”[33] (fraternity) என்பது, [மேலாதிக்க] போட்டியில் நிகழும் களப்போரின் சூழ்ச்சியிலும், சண்டை சச்சரவுகளிலும் நிறைவேற்றம் கண்டது. பலத்தின்மூலமான ஒடுக்குமுறைக்குப் பதிலாக ஊழல்மூலமான ஒடுக்குமுறை வந்தது. முதல்பெரும் சமூக நெம்புகோலாக வாளுக்குப் பதில் தங்கம் இடம்பெற்றது. முதல் இரவுக்கான உரிமை, நிலவுடைமைப் பிரபுக்களிடமிருந்து முதலாளித்துவ ஆலையதிபர்களுக்கு மாற்றப்பட்டது. விபச்சாரம் என்றும் கேள்விப்படாத அளவுக்கு அதிகரித்தது. திருமணம் என்பது முன்பு போலவே சட்ட அங்கீகாரம் பெற்ற விபச்சார வடிவமாகவும், விபசாரத்தின் அதிகாரபூர்வ மூடுதிரையாகவும் தொடர்ந்து இருந்துவந்தது. அதுமட்டுமின்றி, அதன் பிற்சேர்க்கையாகப் பிறன்மனை நயத்தலும் வளமாகச் செழித்தோங்கியது.
சுருங்கக் கூறின், ”பகுத்தறிவின் வெற்றி” (triumph of reason) – யிலிருந்து உதித்தெழுந்த சமூக, அரசியல் நிறுவனங்கள், தத்துவ அறிஞர்களின் ஆரவாரமான வாக்குறுதிகளுடன் ஒப்பிடுகையில், கொடுமையான ஏமாற்றம் தரும் கேலிக் கூத்துகளாகிவிட்டன. இந்த ஏமாற்றத்தை வரைமுறைப்படுத்திட வல்லுநர்கள் இல்லாதது குறைபாடாக இருந்தது. நூற்றாண்டின் இறுதியில் அவர்களும் வந்து சேர்ந்தனர். 1802-இல் சான்-சிமோனின் ஜெனீவாக் கடிதங்கள் வெளியாயின. ஃபூரியேயின் கொள்கைக்கான அடிப்படைக் கருதுகோள்கள் 1799 முதலே உருவாகி வந்த போதிலும் அவருடைய முதலாவது நூல் 1808-இல் வெளிவந்தது. 1800 ஜனவரி 1-ல் இராபர்ட் ஓவன் நியூ லானார்க்கின்[34] (New Lanark) மேலாண்மைப் பொறுப்பை ஏற்றார்.
ஆனாலும், அந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதோடுகூட, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பகைமையும் இன்னமும் அரைகுறை வளர்ச்சியையே கண்டிருந்தன. இங்கிலாந்தில் அப்போதுதான் தோன்றியிருந்த நவீனத் தொழில்துறை, ஃபிரான்சில் இன்னமும் அறியப்படாததாகவே இருந்தது. ஆனால், நவீனத் தொழில்துறை ஒருபுறம் மோதல்களை வளர்க்கிறது. உற்பத்தி முறையில் ஒரு புரட்சியையும், உற்பத்தி முறையின் முதலாளித்துவத் தன்மைக்கு முடிவுகட்டுதலையும் அவசியமாக்கும் மோதல்களை வளர்க்கிறது. தான் தோற்றுவித்த வர்க்கங்களுக்கு இடையேயான மோதல்களை மட்டுமின்றி, தான் உருவாக்கிய அதே உற்பத்தி சக்திகளுக்கும் பரிவர்த்தனை வடிவங்களுக்கும் இடையேயான மோதல்களையும் வளர்க்கிறது. நவீனத் தொழில்துறை மறுபுறம் அதே பிரம்மாண்ட உற்பத்தி சக்திகளுக்குள்ளேயே அம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களையும் வளர்க்கிறது. எனவே, 1800-ஆம் ஆண்டு வாக்கில், புதிய சமுதாய அமைப்பிலிருந்து உதித்தெழுந்த இந்த மோதல்கள் அப்போதுதான் உருவெடுக்கத் தொடங்கியிருந்தன என்றால், இம்மோதல்களுக்கு முடிவுகட்டும் சாதனங்களோ இப்போதும்கூடக் குறைவாகவே வளர்ச்சி கண்டிருந்தன. பாரிஸ் நகரத்தின் ”ஏதும் இல்லாத” சாதாரண மக்கள், பயங்கர ஆட்சியின்போது, குறுகிய காலத்துக்கு மேலாதிக்கம் பெறுவதும், இவ்வாறாக முதலாளித்துவ வர்க்கத்தினரே இருந்த போதிலும், [அவர்களையும் மிஞ்சி] முதலாளித்துவப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் செல்வதும் சாத்தியப்பட்டது. ஆனால், அவ்வாறு செய்ததன் மூலம், அப்போதைய நடப்பு நிலைமைகளில், அவர்களின் ஆதிக்கம் நீடித்து நிலைபெறுவது எவ்வளவு அசாத்தியமானது என்பதையே அவர்கள் நிரூபித்துக் காட்டினர். பாட்டாளி வர்க்கமானது, ”ஏதும் இல்லாத” இந்தச் சாதாரண மக்களிடமிருந்து, அப்போதுதான் முதன்முதலாக ஒரு புதிய வர்க்கத்தின் உட்கருவாய்த் தானாகவே பரிணமித்தது. இன்னமும் சுயேச்சையான அரசியல் நடவடிக்கைக்குச் சற்றும் திறனற்றிருந்த அவ்வர்க்கம் ஒடுக்கப்பட்ட, துயருறும் பகுதியாகவே தோற்றமளித்தது. அவ்வர்க்கம் தனக்குத் தானே உதவிக் கொள்ளும் திறனற்றிருந்த அந்நிலையில், அதிகம் போனால் வெளியிலிருந்தோ அல்லது மேலிடத்திலிருந்தோதான் [தனக்குத் தேவையான] உதவியைப் பெற்றிட முடியும்.
இந்த வரலாற்றுச் சூழ்நிலை சோஷலிசத்தின் நிறுவனர்கள் மீதும் செல்வாக்குச் செலுத்தியது. முதலாளித்துவ முறையிலான உற்பத்தியின் முதிர்ச்சியுறாத நிலைமைகளுக்கும் முதிர்ச்சியுறாத வர்க்க நிலைமைகளுக்கும் ஒத்திசைவான முதிர்ச்சியுறாத கொள்கைகளே முன்வைக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளுக்குரிய தீர்வினை, வளர்ச்சியுறாத பொருளாதார நிலைமைகளில் இன்னமும் மறைந்த கிடந்த அந்தத் தீர்வினைக் கற்பனாவாதிகள் மனித மூளையிலிருந்து உருவாக்க முயன்றார்கள். சமுதாயம் தீங்குகளைத் தவிர வேறெதையும் வெளிப்படுத்தவில்லை. அத்தீங்குகளைக் களைவது பகுத்தறிவின் பணி ஆகும். எனவே, ஒரு புதிய, மிகவும் முழுநிறைவான சமூக ஒழுங்குமுறை அமைப்பைக் கண்டுபிடித்து, பிரச்சாரத்தின் மூலமும், எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எடுத்துக்காட்டான முன்மாதிரிப் பரிசோதனைகள் மூலமும், அந்த அமைப்பை வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது திணிப்பது அவசியமாகும் [எனக் கற்பனாவாதிகள் கருதினர்]. இந்தப் புதிய சமூக அமைப்புகள் கற்பனாவாத அமைப்புகளாகவே நின்றுபோக முன்கூட்டியே விதிக்கப்பட்டவை. அவை எந்த அளவுக்கு முழுமையாகவும் நுணுக்கமாகவும் வகுக்கப்பட்டனவோ, அந்த அளவுக்கு, தூய கற்பனைப் புனைவுகளாக அவை தடம்புரண்டு செல்வதை, தவிர்க்க முடியாது.
இந்த உண்மை விவரங்கள் நிலைநாட்டப்பட்டதுமே, பிரச்சினையின் இப்பக்கத் தரப்பின்மீது இன்னும் ஒருநொடி அதிகமாகவும் நாம் கருத்தூன்றி விவரிக்கத் தேவையில்லை. தற்போது இது முற்றிலும் கடந்த காலத்துக்கு உரியதாகிவிட்டது. இன்று நம்மை நகைக்க மட்டுமே வைக்கும் இந்தக் கற்பனைப் புனைவுகள் குறித்து ஆரவாரத்துடன் சொற்சிலம்பம் ஆட அவற்றை இலக்கியச் சிறு குஞ்சுகளிடம் விட்டுவிடலாம். இவர்தம் சொந்த மொட்டை வாதங்கள், இத்தகு ”பைத்தியக்கார” கற்பனைகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் மேன்மை கொண்டதெனப் பெருமையடித்துக் கொள்ளட்டும். நம்மைப் பொறுத்தவரை, கற்பனைப் புனைவான மேலோட்டை உடைத்துக் கொண்டு திசையெங்கும் வெளிக்கிளம்பும் அற்புதமான விழுமிய சிந்தனைகளையும், சிந்தனைத் துளிர்களையும் கண்டு நாம் பரவசமடைகிறோம். இந்த அற்பவாதிகளின் (Philistines) குருட்டுக் கண்களுக்கோ இவை புலப்படுவதில்லை.
சான்-சிமோன் மாபெரும் ஃபிரெஞ்சுப் புரட்சியின் புதல்வர் ஆவார். அப்புரட்சி வெடித்தபோது அவருக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. ஃபிரெஞ்சுப் புரட்சி, சலுகை பெற்ற சோம்பேறி வர்க்கங்களாகிய பிரபுக்கள், பாதிரியார்கள் ஆகியோர் மீது மூன்றாம் வகைப்பிரிவினர் (Third Estate), அதாவது உற்பத்தித் துறையிலும் வணிகத் துறையிலும் உழைக்கின்ற, தேசத்தின் மாபெரும் மக்கள் திரளின் வெற்றி ஆகும். ஆனால், மூன்றாம் வகைப்பிரிவினரின் இந்த வெற்றி அப்பிரிவினரின் ஒரு சிறு பகுதிக்கு மட்டுமே உரிய வெற்றியாக, அப்பிரிவினருள் சமூக ரீதியில் தனிச்சலுகை பெற்ற ஒரு பகுதியினர், அதாவது சொத்துடைமை படைத்த முதலாளித்துவ வர்க்கத்தினர், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட வெற்றியாக விரைவில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. இந்தப் புரட்சியின்போது முதலாளித்துவ வர்க்கம் அதிவேகத்தில் வளர்ச்சி பெற்றது உண்மைதான். ஒருபாதி, பிரபுக்குலம், திருச்சபை ஆகியவற்றின் நிலங்களைப் பறிமுதல் செய்து, அதன்பின் அவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்து, ஊக வணிகம் செய்ததன் மூலமும், மறுபாதி, இராணுவ ஒப்பந்தங்களைப் பயன்படுத்தித் தேசத்தின் பெயரில் மோசடிகள் புரிந்ததன் மூலமும் இந்த வளர்ச்சி ஏற்பட்டது. இந்த ஏமாற்றுக்காரர்களின் ஆதிக்கம்தான், நெறியாண்மைக் குழுவின் ஆட்சியில், ஃபிரெஞ்சு நாட்டை அழிவின் விளிம்புக்கு இட்டுச் சென்றது. இவ்வாறாக, அவ்வாதிக்கம் நெப்போலியனுக்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடத்துவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
எனவே, சான்-சிமோனைப் பொறுத்தவரை, மூன்றாம் வகைப்பிரிவினருக்கும் சலுகை பெற்ற வர்க்கங்களுக்கும் இடையேயான பகைமை ”தொழிலாளர்களுக்கும்” ”சோம்பேறிகளுக்கும்” இடையேயான பகைமையின் வடிவமாகப் பட்டது. [அவருடைய பார்வையில்] சோம்பேறிகள் என்போர் சலுகை பெற்ற பழைய வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, உற்பத்தி அல்லது வினியோகத்தில் எந்தப் பங்கும் ஆற்றாமல் தங்களின் வருமானத்தில் வாழ்ந்தவர்கள் அனைவருமேதாம். ”தொழிலாளர்கள்” என்போர் கூலித் தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரும்தாம். சோம்பேறிகள் அறிவுசார் தலைமைப் பொறுப்புக்கும், அரசியல் மேலாதிக்கத்துக்குமான செயலாற்றலை இழந்து விட்டனர் என்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. புரட்சியால் முடிவாக நிலைநாட்டப்பட்டும் விட்டது. உடைமையற்ற வர்க்கங்களுக்கும் இத்தகைய செயலாற்றல் இல்லை என்பது பயங்கர ஆட்சியின் அனுபவங்கள் நிரூபித்துவிட்டதாக சான்-சிமோனுக்குத் தோன்றியது. அப்படியெனில், தலைமை தாங்கப் போவதும், அதிகாரம் செலுத்தப் போவதும் யார்? சான்-சிமோனின் கருத்துப்படி விஞ்ஞானம், தொழில்துறை இவையிரண்டும் ஒரு புதிய மதப்பிணைப்பில் இணைந்து, [இதைச் சாதிக்க வேண்டும்.] மதச்சீர்திருத்தக் காலம்தொட்டு இழந்துவிட்ட மதக் கருத்துக்களின் ஒற்றுமையை மீட்டளிக்க இவையிரண்டும் முன்னமே விதிக்கப்பட்டுள்ளன. அப்படியெனில், அத்தகைய மதக் கருத்துகளின் ஒற்றுமை, கட்டாயமாக, ஆன்மீக வழிப்பட்ட, கட்டுறுதியான படிநிலை அமைப்புக் கொண்ட ஒரு ”புதிய கிறித்துவமாகவே” இருக்க வேண்டும். ஆனால், விஞ்ஞானம் கல்விமான்களால் ஆனது; தொழில்துறையோ அதன் முதலிடத்தில் உழைக்கும் முதலாளிகள், ஆலையதிபர்கள், வணிகர்கள், வங்கி உடைமையாளர்கள் ஆகியோரைக் கொண்டது. இந்த முதலாளிகள், ஒருவகைப் பொது அதிகாரிகளாக, ஒருவகை சமூக அறங்காவலர்களாகத் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பது உண்மையிலேயே சான்-சிமோனின் எண்ணமாக இருந்தது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை, இந்த முதலாளிகளே இன்னமும், அதிகாரம் செலுத்தவல்ல, பொருளாதார ரீதியாகச் சலுகை பெற்ற நிலையை வகிப்பார்கள். முக்கியமாக வங்கி உடைமையாளர்கள், கடன் செலாவணியை ஒழுங்குபடுத்தலின் மூலம் ஒட்டுமொத்தச் சமூக உற்பத்தியையும் நெறிப்படுத்தக் கேட்டுக் கொள்ளப்பட வேண்டும். ஃபிரான்சில் நவீனத் தொழில்துறையும், அதனுடன்கூட முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான பெரும்பிளவும் அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்துக்கு, இந்தக் கருத்தமைவு மிகச்சரியாய்ப் பொருந்துவதாகவே இருந்தது. ஆனால், சான்-சிமோன் அதிலும் குறிப்பாக வலியுறுத்திக் கூறுவது இதுதான்: முதலாவதாக, ஏனைய அனைத்துக்கும் மேலானதாக, அவரின் கவனத்தை ஈர்ப்பது, மிகுந்த எண்ணிக்கை கொண்ட, மிகவும் ஏழ்மையான வர்க்கத்தின்” ("la classe la plus nombreuse et la plus pauvre") துன்பமும் துயரமும்தாம்.
சான்-சிமோன் ஏற்கெனவே தன்னுடைய ஜெனீவாக் கடிதங்களில், ”அனைத்து மனிதர்களும் வேலை செய்ய வேண்டும்” என்னும் கருத்தை முன்வைக்கின்றார். அதே கடிதங்களில், அவர் பயங்கர ஆட்சி உடைமையற்ற சாதாரண மக்களின் ஆட்சியே என்பதையும் கண்டு கொள்கிறார். ”ஃபிரான்சு நாட்டில் உங்களுடைய தோழர்கள் ஆட்சி புரிந்தபோது அங்கே என்ன நிகழ்ந்தது, பாருங்கள்; அவர்கள் பஞ்சத்தை உண்டாக்கினர்” என்று மக்களைப் பார்த்துக் கூறுகிறார். ஆனால், ஃபிரெஞ்சுப் புரட்சியை ஒரு வர்க்கப் போர் எனவும், அதுவும் பிரபுக்குலத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையே நடைபெற்ற ஒன்றல்ல, முதலாளித்துவ வர்க்கத்துக்கும் உடைமையற்றோருக்கும் இடையே நடைபெற்றதாகும் எனவும் அடையாளம் காண்பது, அதுவும் 1802-ஆம் ஆண்டில் காண்பது, மிகவும் பொருள்செறிவுள்ள ஒரு கண்டுபிடிப்பாகும். 1816-இல், அரசியல் என்பது உற்பத்தியைப் பற்றிய விஞ்ஞானமாகும் என அறிவிக்கிறார். அரசியலானது பொருளாதாரத்தால் முழு அளவுக்கு உட்கவரப்பட்டுவிடும் என்று முன்னறிந்து கூறுகிறார். பொருளாதார நிலைமைகளே அரசியல் நிறுவனங்களின் அடித்தளம் ஆகும் என்கின்ற அறிவு இங்கே கரு வடிவில்தான் காணப்படுகிறது. எனினும், மிகவும் தெள்ளத் தெளிவாக இங்கே வெளிப்படுத்தப்படுவது என்னவெனில், மனிதர்கள் மீதான [இன்றைய] அரசியல் அதிகாரம், வருங்காலத்தில் பொருள்களின் நிர்வாகமாகவும், உற்பத்திச் செயல்முறைகளின் மேலாண்மையாகவும் மாறிவிடும் என்னும் கருத்தாகும். அதாவது, அண்மைக் காலத்தில் மிகப்பெரும் சலசலப்பை ஏற்படுத்திய ”அரசின் ஒழிப்பு” என்கிற கருத்தே இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.
சான்-சிமோன், அவர் காலத்து அறிஞர்களை மிஞ்சித் தனக்கிருந்த இதே மேதமையை, நேச நாடுகளின் படைகள் பாரிஸ் நகருக்குள் நுழைந்த பிறகு உடனடியாக 1814-லும், மீண்டும் 1815-இல் நூறு நாள் போரின்[35] போதும் வெளிப்படுத்தினார். ஃபிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளின் கூட்டணியும், பிறகு ஜெர்மனியுடன் இவ்விரு நாடுகளின் கூட்டணியும்தான் ஐரோப்பாவின் செழிப்பான வளர்ச்சிக்கும் சமாதானத்துக்கும் ஒரே உத்திரவாதம் எனப் பிரகடனம் செய்கிறார். வாட்டர்லூ[36] வெற்றியாளர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு 1815-இல் ஃபிரெஞ்சு நாட்டவர்க்கு உபதேசிக்க எந்த அளவுக்கு வரலாற்று முன்னோக்கு வேண்டுமோ, அந்த அளவுக்குத் தைரியமும் வேண்டும்.
சான்-சிமோனிடம் ஒரு விரிவான பரந்த பார்வையைக் காண்கிறோம். இத்தன்மையின் காரணமாக, பிற்காலத்து சோஷலிஸ்டுகளின் அனைத்துக் கருத்துகளையும், கண்டிப்பாகப் பொருளாதாரம் சார்ந்தவையாக இல்லாதவை உட்பட, சான்-சிமோனின் கருத்துகளில் கருவடிவில் இருக்கக் காண்கிறோம். அதேவேளையில், ஃபூரியேயிடம் தற்போது நிலவும் சமுதாய நிலைமைகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தைக் காணுகிறோம். இந்த விமர்சனம் அசலான ஃபிரெஞ்சுப் பாணியில் அமைந்தது, நகைச்சுவை வாய்ந்தது. ஆனால், அதன் காரணமாக, எந்த வகையிலும் ஆழம் குறைந்துவிடாதது. முதலாளித்துவ வர்க்கத்தினர், புரட்சிக்கு முன்பு அவர்களுக்கு உத்வேகத்துடன் தீர்க்க தரிசனம் வழங்கியோர், புரட்சிக்குப் பிறகு அவர்களைத் துதிபாடுவோர் ஆகியோர்மீது அவர்களின் சொற்களைக் கொண்டே தாக்குதல் தொடுக்கிறார். முதலாளித்துவ உலகின் பொருளாயத, ஒழுக்கநெறி சார்ந்த அவலங்களைச் சிறிதும் இரக்கமின்றித் தோலுரித்துக் காட்டுகிறார். பகுத்தறிவு மட்டுமே ஆட்சி செலுத்தும் சமுதாயம், அனைவருக்கும் இன்ப வாழ்வை வழங்கும் நாகரிகம், வரம்பில்லா மனித மேம்பாடு ஆகியவற்றை முதலாளித்துவ உலகம் படைத்தளிக்கும் என முன்பு அதன் தத்துவ அறிஞர்கள் அளித்த பிரகாசமான வாக்குறுதிகளையும், அவர்காலத்து முதலாளித்துவச் சித்தாந்திகளின் நடைமுறைக்கு ஒவ்வாத சொல்லடுக்குளையும், தற்போதைய முதலாளித்துவ அவலங்களுக்கு நேரெதிரே நிறுத்திக் காட்டுகிறார். மிகவும் ஆரவாரமான சொல்லடுக்குகளுக்கு இணையாக, எவ்வாறு எங்கு நோக்கினும் மிகவும் பரிதாபகரமான எதார்த்தம் நிலவுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். சொல்லடுக்குகளின் இந்த மிக மோசமான படுதோல்வியைக் காரசாரமான தன்னுடைய கிண்டலால் திணறடிக்கிறார்.
ஃபூரியே ஒரு விமர்சகர் மட்டுமன்று. அமைதி குலையாத சாந்தமான அவரின் இயல்பு, அவரை ஒரு அங்கத எழுத்தாளராகவும் [புகழ்வதுபோல் இகழ்வது அங்கதம் எனப்படும்], நிச்சயமாக எந்தக் காலத்துக்கும் தலைசிறந்த அங்கத எழுத்தாளர்களில் ஒருவராகவும் அவரை ஆக்கிவிடுகிறது. புரட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தழைத்தோங்கிய ஊக வணிக மோசடிகளையும், அக்காலகட்டத்தில் ஃபிரெஞ்சு வணிகத்தில் பரவலாக நிலவிய, அதன் பண்பியல்பான, கடைக்கார மனோபாவத்தையும், அவர் சம வலிவோடும் வனப்போடும் சித்தரிக்கின்றார். பாலினங்களுக்கு இடையேயான உறவுகளின் முதலாளித்துவ வடிவத்தையும், முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களின் நிலையையும் பற்றிய அவருடைய விமர்சனம் இன்னும் கைதேர்ந்த ஒன்றாகும். எந்தவொரு குறிப்பிட்ட சமுதாயத்திலும் பெண் விடுதலையின் தரமே சமுதாய விடுதலையின் தரத்தை அளவிடும் இயல்பான அளவுகோலாகும் என்று முதன்முதலில் அறிவித்தவர் ஃபூரியே ஆவார்.
ஆனால், ஃபூரியே, சமுதாயத்தின் வரலாறு பற்றிய அவரது கருத்தோட்டத்தில்தான் தலைசிறந்து விளங்குகிறார். இதுநாள்வரையுள்ள வரலாற்றின் போக்கினை, காட்டுமிராண்டி நிலை, நாகரிகமற்ற நிலை, தந்தைவழிச் சமூகம், நாகரிக நிலை என நான்கு பரிணாம வளர்ச்சிக் கட்டங்களாகப் பிரிக்கிறார். நாகரிக நிலை என்கிற கடைசிக் கட்டம் இன்றைய குடிமைச் சமுதாயத்தை அல்லது முதலாளித்துவ சமுதாயத்தை, அதாவது, 16-ஆம் நூற்றாண்டில் உருவான சமுதாய அமைப்பைக் குறிக்கிறது. ”நாகரிகமற்ற காலகட்டத்தில் எளிய வடிவில் நடைமுறையிலிருந்த தீயொழுக்கம் ஒவ்வொன்றையும் நாகரிகக் கட்டம், சிக்கலான, குழப்பம்மிக்க, தெளிவற்ற, வஞ்சகத் தன்மை கொண்ட வாழ்க்கை வடிவமாக உயர்த்தியுள்ளது” என்பதை நிரூபிக்கிறார். நாகரிகம், ”ஒரு நச்சு வட்டத்தில் சுற்றி வருகிறது”. தொடர்ந்து முரண்பாடுகளை மறு உற்பத்தி செய்து அவற்றைத் தீர்த்துவைக்கும் திறனின்றி, முரண்பாடுகளிலேயே இயங்குகிறது. எனவே, அது சாதிக்க விரும்புவதற்கு அல்லது சாதிக்க விரும்புவதாகப் பாசாங்கு செய்வதற்கு நேர் எதிரான நிலைமைக்கே எப்போதும் வந்தடைகிறது. எடுத்துக்காட்டாக, ”நாகரிகக் கட்டத்தில் மீமிகை வளத்திலிருந்தே வறுமை பிறக்கிறது” என்பதையும் அவர் நிரூபித்துக் காட்டுகிறார்.
நாம் பார்த்தவாறு, ஃபூரியே அவர்காலத்தவரான ஹெகலைப் போலவே அதே அறிவார்ந்த வழியில் இயக்கவியல் வழிமுறையைப் பயன்படுத்தும் பாங்கினைக் காண்கிறோம். அதே இயக்கவியலைப் பயன்படுத்தி, வரம்பில்லா மனித மேம்பாடு குறித்துப் பேசுவதை எதிர்த்து ஃபூரியே வாதிடுகிறார். ஒவ்வொரு வரலாற்றுக் கட்டமும் அதன் ஏறுமுகக் காலகட்டத்தையும், இறங்குமுகக் காலகட்டத்தையும் பெற்றுள்ளது என்கிறார். இந்தக் கூர்ந்த கவனிப்பை, ஒட்டுமொத்த மனித இனத்தின் எதிர்காலத்துக்கும் பயன்படுத்துகிறார். கடைசி முடிவாகப் பூமி அழிந்துபோகும் என்னும் கருத்தை இயற்கை விஞ்ஞானத்தில் எவ்வாறு கான்ட் புகுத்தினாரோ, அதேபோல ஃபூரியே மனிதகுலத்தின் இறுதி அழிவெனும் கருத்தை வரலாற்று விஞ்ஞானத்தில் புகுத்தினார்.
ஃபிரான்சில் புரட்சிச் சூறாவளி நாடெங்கும் சுழன்றடித்தபோது, இங்கிலாந்தில் அதைவிட அமைதியான, ஆனால் அதன் காரணமாக, பேராற்றலில் எந்த வகையிலும் குறைந்துவிடாத, ஒரு புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீராவியும், புதிய கருவித் தயாரிப்பு எந்திர சாதனங்களும் பட்டறைத் தொழிலை நவீனத் தொழில்துறையாக மாற்றிக் கொண்டிருந்தன. அதன்மூலம் முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளத்தையே அடியோடு புரட்சிகரமாக்கி வந்தன. பட்டறைத் தொழில் காலத்தில் மந்த கதியில் நடைபோட்டு வந்த வளர்ச்சி, உற்பத்தியில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டமாக மாறியது. சமுதாயம் பெரு முதலாளிகளாகவும் உடைமையற்ற பாட்டாளிகளாகவும் பிளவுறுவது, தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் வேகத்தில் நிகழ்ந்தது. இவ்விரு வர்க்கங்களுக்கும் இடையில், முன்பிருந்த நிலையான நடுத்தர வர்க்கத்துக்குப் பதிலாகக் கைவினைத் தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் அடங்கிய ஒரு நிலையற்ற மக்கள் திரள் இடம்பெற்றது. மக்களில் மிகவும் ஊசலாட்டமான பகுதியினரான இவர்கள் ஒரு பாதுகாப்பற்ற வாழ்க்கை நடத்தினர்.
புதிய உற்பத்தி முறை அதன் ஏறுமுகத்தின் தொடக்க நிலையிலேதான் இன்னமும் இருந்தது. இப்போது அதுதான் இயல்பான, முறையான உற்பத்தி முறையாக இருந்தது. தற்போதைய நிலைமைகளில் சாத்தியமான ஒரேவொரு உற்பத்தி முறையாகவும் இருந்தது. எனினும், இந்த நிலையிலுங்கூட அது மிக மோசமான சமூகக் கேடுகளை உண்டாக்கி வந்தது. வசிக்க வீடில்லாத மக்கள் கூட்டம், பெரிய நகரங்களின் படுமோசமான குடியிருப்புகளில் மந்தைகளாக அடைபட்டுக் கிடந்தனர். மரபு வழியிலான அனைத்து ஒழுக்கநெறிக் கட்டுப்பாடுகளும், குடும்பத் தலைவருக்குக் கீழ்ப்படிதலும், குடும்பப் பிணைப்புகளும் தளர்ந்து போயின. மிகுதியான வேலைப்பளு, முக்கியமாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சுறுத்தும் அளவுக்கு இருந்தது. தொழிலாளர் வர்க்கத்தினர், நாட்டுப்புறத்திலிருந்து நகரத்துக்கும், விவசாயத்திலிருந்து நவீனத் தொழில்துறைக்கும், நிலையான வாழ்க்கை நிலைமைகளிலிருந்து நாள்தோறும் மாறுகின்ற பாதுகாப்பற்ற வாழ்க்கை நிலைமைகளுக்குமாக, முற்றிலும் புதிய நிலைமைகளுக்குள் திடீரெனத் தூக்கியெறியப்பட்டு, முழுதும் நம்பிக்கை இழந்தோராயினர்.
இந்தச் சூழ்நிலையில் 29 வயதான ஓர் ஆலையதிபர் சீர்திருத்தவாதியாக முன்னணிக்கு வந்தார். ஏறத்தாழ குழந்தையைப் போன்ற எளிய உன்னதப் பண்புகள் கொண்ட ஒரு மனிதர். அதேவேளையில், மனிதர்களின் பிறவித் தலைவர்கள் மிகச்சிலருள் ஒருவர். இராபர்ட் ஓவன் பொருள்முதல்வாதத் தத்துவ அறிஞர்களின் போதனையை ஏற்றுக் கொண்டவர். அதாவது, மனிதனின் பண்பியல்பு, ஒருபுறம் மரபுவழியிலும், மறுபுறம் அத்தனிநபரின் ஆயுள்காலத்தில் அதிலும் முக்கியமாக அவனுடைய வளர்ச்சிக் கட்டத்தில் நிலவுகின்ற சூழ்நிலையாலும் உருவாக்கப்படுகின்றது. அவர்சார்ந்த வர்க்கத்தினரில் மிகப்பலர் தொழில்புரட்சியில் குளறுபடியையும், குழப்பத்தையும், குழம்பிய குட்டையில் மீன்பிடித்து, குறுகிய காலத்தில் பெருஞ்செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பையுமே கண்ணுற்றனர். ஓவனோ தன்னுடைய மிகவிருப்பமான கொள்கையை நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் குளறுபடியிலிருந்து ஒழுங்கை நிலைநாட்ட, இந்தத் தொழில்புரட்சியில் நல்வாய்ப்பு இருப்பதைக் கண்டார். ஏற்கெனவே மான்செஸ்டர் ஆலை ஒன்றில் ஐந்நூறுக்கு மேற்பட்டோரின் மேலாளராக இருந்தபோது, அவருடைய கொள்கையை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். [அதன்பின்] 1800-லிருந்து 1829 வரையில், ஸ்காட்லாந்தில் நியூ லானார்க் என்னும் நகரில் அமைந்த மாபெரும் பஞ்சாலையின் மேலாண்மைக் கூட்டாளியாக இருந்துகொண்டு, அதே வழிமுறைகளில், ஆனால் மேலும் அதிக சுதந்திரத்துடன் அப்பஞ்சாலையை வழிநடத்தி வெற்றி கண்டார். அவ்வெற்றி ஐரோப்பிய அளவில் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. தொடக்கத்தில், மிகவும் மாறுபட்ட தன்மை கொண்ட, பெரும்பகுதியும் நம்பிக்கையற்றுப் போன மனிதர்களைக் கொண்ட ஒரு மக்கள் தொகுதியை, படிப்படியாக 2,500 பேராக வளர்ச்சி பெற்ற ஒரு மக்கள் தொகுதியை, ஓவன் ஒரு முன்மாதிரியான குடியிருப்பாக மாற்றிக் காட்டினார். அந்தக் குடியிருப்பு, குடிப்பழக்கம், போலீஸ், நீதிபதிகள், வழக்குகள், ஏழ்மையர் சட்டங்கள், அறக்கட்டளை இவைபற்றி அறிந்ததில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நிலைமைகளில் மக்களை வைத்திருப்பதன் மூலமும், இன்னும் முக்கியமாக வளர்ந்துவரும் தலைமுறையைக் கவனமாக வளர்த்து ஆளாக்குவதன் மூலமும் ஓவன் இதனைச் சாதித்தார். அவர்தான் குழந்தைப் பள்ளிகளைத் தோற்றுவித்த முன்னோடி. முதன்முதலாக நியூ லானார்க்கில் அவற்றை அறிமுகப்படுத்தினார். இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல மனம் வராதபடி, அந்த அளவுக்கு அங்கே அவர்கள் ஆனந்தமாக இருந்தனர். ஓவனின் போட்டியாளர்கள் தங்கள் தொழிலாளர்களிடம் ஒரு நாளைக்கு 13, 14 மணிநேரம் வேலை வாங்கியபோது, நியூ லானார்க்கில் வேலைநாள் பத்தரை மணிநேரம் கொண்டதாகவே இருந்தது. ஒருமுறை பருத்திப் பற்றாக்குறையால் நான்கு மாத காலம் பஞ்சாலையில் வேலை நிறுத்தப்பட்டபோது, ஓவனின் தொழிலாளர்கள் எல்லாக் காலத்துக்கும் முழுச் சம்பளம் பெற்றனர். இவ்வளவும் இருந்தபோதும், ஆலையின் வணிக மதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாகப் பெருகியது. இறுதிவரை ஆலையின் உடைமையாளர்களுக்கு மிகுந்த இலாபத்தை அளித்து வந்தது.
இத்தனைக்குப் பிறகும் ஓவன் மனநிறைவு அடையவில்லை. தன்னுடைய தொழிலாளர்களுக்கு அவர் பெற்றுத் தந்த வாழ்க்கை, அவர் பார்வையில், மனிதர்களுக்குத் தகுதியான வாழ்விலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகவே பட்டது. ”இம்மக்கள் என் தயவில் அடிமைகளாகவே இருந்தனர்.” தன்னுடைய தொழிலாளர்களுக்கு ஓவன் வழங்கியிருந்த வாழ்க்கை நிலைமைகள் ஒப்பீட்டளவில் அனுகூலமானவை என்றாலும், அவர்களின் பண்பியல்பும், அறிவுத்திறனும் அனைத்துத் திசைகளிலும் நியாயமான வளர்ச்சிபெற அனுமதிக்கும் நிலைக்கு இன்னமும் எட்டாத தொலைவிலேயே அவை இருந்தன. அவர்களுடைய வினையாற்றல்கள் அனைத்தையும் சுதந்திரமாகச் செயல்படுத்த மிகவும் குறைவான வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கை நிலைமைகளே இருந்தன. ”இருந்த போதிலும், இந்த 2,500 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி, சமுதாயத்துக்கு நாள்தோறும் உற்பத்தி செய்து வருகின்ற உண்மையான செல்வத்தின் அளவுக்கு, அரை நூற்றாண்டுக்கும் குறைவான காலத்துக்கு முன்பு உற்பத்தி செய்திட, 6,00,000 பேரைக் கொண்ட மக்கள் தொகுதியின் உழைக்கும் பகுதி தேவைப்பட்டிருக்கும். [இன்று] 2,500 பேர் நுகர்ந்த செல்வத்துக்கும், [அன்று] 6,00,000 பேர் நுகர்ந்திருக்கக்கூடிய செல்வத்துக்கும் இடையிலுள்ள வேறுபாடு, [அவ்வகையில் மீந்திருக்க வேண்டிய செல்வம்] என்ன ஆயிற்று என என்னை நானே கேட்டுக் கொண்டேன்” [என்று ஓவன் எழுதினார்].
விடை தெளிவானது. ஆலையின் உடைமையாளர்களுக்கு, அவர்கள் போட்ட மூலதனத்துக்கான 5 சதவீதத் தொகையையும், அதோடு சேர்த்து 3,00,000 பவுண்டுகளுக்கு மேற்பட்ட நிகர இலாபத்தையும் வழங்குவதற்காக இச்செல்வம் பயன்படுத்தப்பட்டுவிட்டது. நியூ லானார்க் ஆலைக்குக் கூறப்பட்ட இந்த உண்மை, இங்கிலாந்திலுள்ள அனைத்து ஆலைகளுக்கும் இன்னும் அதிக அளவுக்குப் பொருந்துவதாக இருந்தது.
”எந்திரச் சாதனங்கள், சீரற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட நிலையிலும், இந்தப் புதிய செல்வத்தைப் படைக்காமல் இருந்திருப்பின், நெப்போலியனுக்கு எதிராகவும், சமுதாயத்தின் பிரபுக்குலக் கோட்பாடுகளை ஆதரித்தும், ஐரோப்பாவில் நடத்தப்பட்ட யுத்ததங்களைத் தொடர்ந்து நடத்த முடிந்திருக்காது. என்றாலும், இந்தப் புதிய சக்தி உழைக்கும் வர்க்கங்களின் படைப்பாகும்.” [குறிப்பு 1.சி., பக்கம் 22]. எனவே, இந்தப் புதிய சக்தியின் பலன்கள் அவர்களுக்கே உரியனவாகும். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரம்மாண்ட உற்பத்தி சக்திகள், இதுநாள்வரை தனிநபர்களைச் செழிப்பாக்கவும், சாதாரண மக்களை அடிமையாக்கவுமே பயன்படுத்தப்பட்டன. ஓவனுக்கோ அவை சமுதாயத்தின் மறுகட்டமைப்புக்கான அடித்தளங்களை நல்கின. அனைவரின் பொதுச் சொத்தாகவும், அனைவரின் பொது நன்மைக்காகச் செயல்படுத்தப்படப் போகிற சக்திகளாகவும் அமைந்தன.
ஓவனுடைய கம்யூனிசம் முற்றிலும் இந்தத் தொழில்முறை அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். வணிகக் கணக்கீட்டின் விளைவு எனக் கூறலாம். இறுதிவரை, இந்த நடைமுறை சார்ந்த தன்மையை அது தொடர்ந்து மெய்ப்பித்து வந்தது. இவ்வாறு, 1823-இல் ஓவன் அயர்லாந்தில் கம்யூனிசக் குடியிருப்புகள் மூலம், [மக்களின்] இன்னல் களைவதற்கான திட்டத்தைப் பரிந்துரைத்தார். இந்தக் குடியிருப்புகளை அமைப்பதற்கான செலவு, [பராமரிப்புக்கான] ஆண்டுச் செலவினங்கள், அனேகமாக [அதிலிருந்து பெறப்படும்] வருமானம் ஆகியவை அடங்கிய முழுமையான திட்ட மதிப்பீடுகளை வகுத்திட்டார். வருங்காலத்துக்கான அவருடைய வரையறுக்கப்பட்ட திட்டத்தில், விவரங்களின் நுட்பமான வரையறுப்புகள், அப்படியொரு நடைமுறை அனுபவ அறிவுடன் கையாளப்பட்டுள்ளன. அடித்தளத் திட்டம், முன்புறக் காட்சி, பக்கவாட்டுக் காட்சி, மேலிருந்து நோக்கும் பொதுவான காட்சி என அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. சமூகச் சீர்திருத்தத்துக்கான ஓவனின் வழிமுறையை ஏற்றுக் கொண்டால், அவர் உள்ளபடியே முன்வைத்துள்ள விவரங்களின் ஒழுங்கமைப்புக்கு எதிராக, நடைமுறைக் கண்ணோட்டத்திலிருந்து சொல்வதற்கு ஏதுமில்லை.
கம்யூனிசத் திசைவழியில் ஓவனின் முன்னேற்றம் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. வெறுமனே ஒரு கொடையாளியாக மட்டும் ஓவன் இருந்தவரை, அவருக்குச் செல்வமும், பாராட்டும், மதிப்பும், புகழுமே வந்து குவிந்தன. ஐரோப்பாவிலேயே மிகவும் செல்வாக்குப் பெற்ற மனிதராகத் திகழ்ந்தார். அவருடைய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அரசியல் வல்லுநர்களும், பிரபுக்களும் அவரின் கருத்துகளை ஆமோதித்து ஆங்கீகரித்தனர். ஆனால், அவர் தம்முடைய கம்யூனிசக் கொள்கைகளை முன்வைத்தபோது, நிலைமை முற்றிலும் வேறானது. முக்கியமாகச் சமூகச் சீர்திருத்தத்துக்கான பாதையைத் தடுக்கும் மூன்று பெரும் தடைகள் அவருக்குத் தென்பட்டன: தனியார் சொத்துடைமை, மதம், திருமணத்தின் தற்போதைய வடிவம். இவற்றின்மீது தாக்குதல் தொடுத்தால் தாம் எவற்றையெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என ஓவன் அறிந்து வைத்திருந்தார். சட்டப் பாதுகாப்பின்மை, அதிகாரபூர்வ சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்படுதல், தம்முடைய முழுமையான சமூக அந்தஸ்தையே இழத்தல் ஆகியவற்றை அவர் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் விளைவுகள் பற்றிய அச்சமின்றி அவற்றின்மீது தாக்குதல் தொடுப்பதிலிருந்து இவற்றுள் எதுவும் அவரைத் தடுத்து நிறுத்திவிடவில்லை. [இவ்வாறுதான் நடக்குமென] அவர் முன்னறிந்தபடியே நிகழ்ந்தது. பத்திரிகைகளில் அவருக்கு எதிரான மௌனச் சதியுடன் கூடவே, அதிகாரபூர்வச் சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தம் செல்வம் அனைத்தையும் பலியிட்டு அமெரிக்காவில் அவர் நடத்திய வெற்றிபெறாத கம்யூனிசப் பரிசோதனைகளால் தம்முடைய செல்வத்தையெல்லாம் இழந்து நொடித்துப் போனார். நேரடியாகத் தொழிலாளி வர்க்கத்திடம் வந்து சேர்ந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் அவர்களிடையே பணியாற்றினார். [அக்காலகட்டத்தில்] இங்கிலாந்தில் தொழிலாளர்கள் சார்பிலான ஒவ்வொரு சமூக இயக்கமும், ஒவ்வொரு மெய்யான முன்னேற்றமும் இராபர்ட் ஓவனின் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டுள்ளன. தொழில்கூடங்களில் பெண்கள், குழந்தைகளின் வேலைநேரத்துக்கு வரம்பு விதித்த முதலாவது சட்டத்தை[37], ஐந்து ஆண்டுகள் போராட்டத்துக்குப்பின், 1819-இல் நிர்ப்பந்தம் கொடுத்து. நிறைவேறச் செய்தார். இங்கிலாந்தின் அனைத்துத் தொழிற் சங்கங்களும் ஒரே மாபெரும் தொழிற்சங்க கூட்டமைப்பாக இணைந்து நடத்திய முதலாவது காங்கிரசின் தலைவராக இருந்தார்[38]. சமுதாயத்தின் முழுமையான கம்யூனிசவழி அமைப்புமுறைக்குரிய இடைக்கால நடவடிக்கைகளாக, ஒருபுறம் சில்லறை வணிகத்துக்கும் உற்பத்திக்குமாகக் கூட்டுறவுக் கழகங்களை ஓவன் அறிமுகப்படுத்தினார். அக்காலகட்டம் முதலாக, குறைந்தது அவை வியாபாரிகளும் ஆலையதிபர்களும் சமூக ரீதியாகச் சிறிதும் தேவையற்றவர்கள் என்பதற்கான நடைமுறை நிரூபணத்தை வழங்கின. மறுபுறம், தொழிலாளர்களின் உற்பத்திப் பொருள்களை உழைப்பு-நோட்டுகளுக்குப் பரிவர்த்தனை செய்துகொள்ள உழைப்புக் கடைவீதிகளை[39] அவர் அறிமுகப்படுத்தினார். இந்த உழைப்பு-நோட்டுகளின் அலகு ஒரு மணிநேர வேலை ஆகும். இந்த நிறுவனங்களின் தோல்வி நிச்சயமாகத் தவிர்க்கமுடியாத ஒன்று என்றாலும், மிகவும் பிந்தைய ஒரு காலகட்டத்தில் புரூதோனின் (Proudhon) பரிவர்த்தனை வங்கி[40] அமைக்கப்படுவதற்கு இவை முழு அளவில் முன்னோடியாக விளங்கின. [புரூதோனின் வங்கியைப்போல] இவை சமூகக் கேடுகள் அனைத்துக்கும் சஞ்சீவி மருந்தெனக் கூறிக் கொள்ளவில்லை. ஆனால் சமுதாயத்தை மேலும் தீவிரமாக மாற்றியமைப்பதற்கான முதலாவது முயற்சி மட்டுமே. அந்த வகையில், ஓவனின் நிறுவனங்கள் புரூதோனின் வங்கியிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விளங்கின.
கற்பனாவாதிகளின் சிந்தனை முறை 19-ஆம் நூற்றாண்டின் சோஷலிசக் கருத்துக்களின் மீது நீண்ட காலத்துக்கு ஆளுமை செலுத்தி வந்தது. அவற்றுள் சிலவற்றின் மீது இன்னமும் ஆளுமை செலுத்தி வருகிறது. மிக அண்மைக் காலம்வரை ஃபிரெஞ்சு, ஆங்கில சோஷலிஸ்டுகள் அனைவரும் இவ்வகைச் சிந்தனை முறைக்கு வழிபாடு செய்துவந்தனர். வைட்லிங்கின் (Weitling) சிந்தனை உட்பட, முற்பட்ட ஜெர்மன் கம்யூனிசம் இதே சிந்தனை மரபைச் சேர்ந்ததுதான். இவர்கள் அனைவருக்கும் சோஷலிசம் என்பது முற்றான உண்மை (absolute truth), பகுத்தறிவு, நீதி ஆகியவற்றின் வெளிப்பாடாகும். சோஷலிசம் தன் சொந்த சக்தியின் சிறப்புத் தன்மையாலேயே அனைத்துலகையும் வெற்றிகொள்ள அதனைக் கண்டுபிடித்துச் சொன்னாலே போதும். முற்றான உண்மை என்ற வகையில் அது காலம், இடம், மனிதனுடைய வரலாற்று ரீதியான வளர்ச்சி ஆகியவற்றைச் சார்ந்திருக்கவில்லை. எப்போது, எங்கே அது கண்டுபிடிக்கப்படுகிறது என்பது வெறும் தற்செயல் நிகழ்ச்சியே ஆகும். இவ்வளவு இருந்தும்கூட முற்றான உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகியவை வெவ்வேறு சிந்தனை மரபுகள் ஒவ்வொன்றின் நிறுவனருக்கும் வெவ்வேறு வகையினதாகவே இருக்கின்றன. ஒவ்வொருவருடைய விசேஷ வகைப்பட்ட முற்றான உண்மை, பகுத்தறிவு, நீதி ஆகியவை மீண்டும், அவருடைய அகவயப் புரிதல், அவருடைய வாழ்க்கை நிலைமைகள், அவருடைய அறிவின் ஆழம், அவருடைய மதிநுட்பப் பயிற்சி ஆகியவற்றால் தாக்கம் பெறுகின்றன. இந்தக் காரணத்தால், இந்த முற்றான உண்மைகள் [தமக்குள் பொதுக் கூறுகள் எதுவுமின்றி] ஒன்றையொன்று பரஸ்பரம் விலக்கி வைப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் வந்தடைவது சாத்தியமன்று. எனவே, இதிலிருந்து ஒருவகையான கதம்பவாத, சராசரி சோஷலிசத்தைத் தவிர வேறெதுவும் தோன்ற வழியில்லை. உண்மையில் பார்க்கப் போனால், இத்தகைய ஒரு சோஷலிசம்தான் ஃபிரான்சிலும் இங்கிலாந்திலும் மிகப் பெரும்பாலான சோஷலிஸ்டுத் தொழிலாளர்களின் உள்ளங்களை இன்றைய நாள்வரை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, இது, மிகப் பன்முகக் கருத்துச் சாயல்களுக்கும் இடம்தரும் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு; வேறுபட்ட குழுக்களின் நிறுவனர்களால் வழங்கப்பட்ட, குறைந்தபட்ச எதிர்ப்பைத் தூண்டும்படியான அத்தகு விமர்சன அறிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகள், வருங்காலச் சமுதாயம் குறித்த சித்திரங்கள் ஆகியவற்றின் குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு; [பல்வேறு சிந்தனைகளில் அடங்கியிருந்த] தனிப்பட்ட உள்ளடக்கக் கூறுகளின் மிகத் தெளிவான கூர்முனைகள், நீரோடையில் உருண்டு மழுங்கிய கூழாங்கற்களைப் போல, விவாத நீரோட்டத்தில் மழுங்கடிக்கப்பட்டு, மிக எளிதில் கலந்து உருவாக்கப்பட்ட குழப்பமூட்டும் ஒரு கதம்பக் கூட்டு.
சோஷலிசத்தை ஒரு விஞ்ஞானமாக்க, முதலில் அதை [கற்பனை அல்லாத] ஓர் உண்மையான அடித்தளத்தின் மீது இருத்த வேண்டியிருந்தது.
(அத்தியாயம்-1 முற்றும்)
அடுத்த பகுதி: அத்தியாயம்-2: [இயக்கவியலும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்]
முந்தைய பகுதி: ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் 1892-ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய சிறப்பு முன்னுரை
அடிக்குறிப்புகள்
[அடிக்குறிப்பைப் படித்து முடித்தபின், அடிக்குறிப்பு எண்மீது சொடுக்கி, நூலின் உரைப்பகுதியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம்.]
[26] உலகம் தலையால் நின்ற காலம்: பிரெஞ்சுப் புரட்சி பற்றிய அந்த வாசகம் வருமாறு: ”உரிமை என்னும் சட்டத்தின் கருத்துருவான சிந்தனை, திடுமென தன்னை வெளிக்காட்டிக் கொண்டது. உரிமையின்மை எனும் பழைய கட்டுமானத்தால் இதை எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவே உரிமை என்னும் இந்தக் கருத்தோட்டத்தின்படி இப்போது ஓர் அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டிருக்கிறது, இனி அனைத்தும் இதையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். அண்டத்தில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றிவரும் காலம்தொட்டு, மனிதன் தன் தலையின் மீது, அதாவது எண்ணத்தின் மீது நின்று, அந்தப் படிமத்துக்கு ஏற்ப எதார்த்தத்தைக் கட்டியமைக்கும் ஒரு காட்சியினை இதற்குமுன் எப்போதும் கண்டதே இல்லை. அனக்சாகோரஸ், Nous அதாவது பகுத்தறிவே உலகை ஆளுகிறது என்று முதன்முதலில் கூறினார். ஆனால், இப்போது முதன்முறையாக மனிதன், மன ரீதியான எதார்த்தத்தை எண்ணமே ஆள வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு விட்டான். இது ஓர் உன்னதமான அறிவு விடியலாகத் திகழ்ந்தது. சிந்திக்கத் தெரிந்த அனைவரும் இந்தப் புனித நாளைக் கொண்டாடுவதில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர். ஒரு பெருமித உணர்வு அந்நாட்களில் மனிதர்களை ஆட்கொண்டது. உலகத்தோடு தெய்வீகக் கோட்பாட்டின் இணக்கம் தற்போது ஏற்பட்டுவிட்டது போன்று, பகுத்தறிவின் உற்சாகம் உலகமெங்கும் வியாபித்து நின்றது” (ஹெகல், வரலாற்றின் தத்துவம், 1840, பக்கம் 535). – காலஞ்சென்ற பேராசிரியர் ஹெகலின், சீர்குலைவு உண்டாக்கும், பொது அபாயம் விளைவிக்கும் இத்தகைய போதனைகளுக்கு எதிராக, சோஷலிஸ்டு – எதிர்ப்புச் சட்டத்தை உடனே செயல்படச் செய்வதற்கு இதுதான் சரியான தருணம் அல்லவா? [ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].
[27] ரூசோவின் சமூக ஒப்பந்தம்: ரூசோவின் தத்துவப்படி, ஆதியில் சமத்துவமாய் வாழ்ந்த மக்களிடையே, தனியார் சொத்துரிமை தோன்றியபின் ஏற்ற தாழ்வுகள் உருவாயின. அதன்பின் சமுதாய ஒப்பந்த அடிப்படையில் அரசுக்கு மாறினர். அரசியல் ஏற்ற தாழ்வு வளரவே, சமுதாய ஒப்பந்தம் மீறப்பட்டு, உரிமையற்ற நிலை தலைதூக்கியது. ஒரு புதிய சமுதாய ஒப்பந்த அடிப்படையில், சிந்தனையின் ஆட்சிக்கு உகந்த ஓர் அரசை நிறுவுவதே இந்த நிலைக்கு மாற்று ஆகும்.
[28] அனாபாப்டிஸ்டுகள்: 16-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும் தோன்றிய சமயப் பிரிவினர். குழந்தைப்பருவத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் அறிவு வளர்ச்சி பெற்ற பிறகு மறுபடியும் ஞானஸ்நானம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியவர்கள். இவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் ஆவர். 1524-25 ஆண்டுகளில் நடைபெற்ற விவசாயிகள் யுத்தத்தில் தாமஸ் முன்ஸேர் தலைமையில் போராடினர்.
[29] சமன்வாதிகள்: 17-ஆம் நூற்றாண்டின் ஆங்கில முதலாளித்துவப் புரட்சியில் தீவிர இடதுசாரிப் போக்கின் பிரதிநிதிகள். நகர்ப்புற, நாட்டுப்புற மக்களில் ஏழைப் பகுதியினரின் நலன்களை வெளியிட்டனர். தனியார் நிலவுடைமை ஒழிக்கப்பட வேண்டும் என்பது இவர்கள் கருத்து. புராதனச் சமத்துவக் கம்யூனிசக் கருத்துகளைப் பிரசாரம் செய்தனர். பொது நிலங்களைக் கூட்டாக உழுது பயிரிடுவதன் மூலம் நடைமுறையில் இக்கருத்துகளைச் செயல்படுத்த முயன்றனர்.
[30] கற்பனாவாதச் சித்திரங்கள்: கற்பனாவாதக் கம்யூனிசத்தை எடுத்துரைத்தவர்களின் நூல்களான, தாமஸ் மோரின் உத்தோப்பியா (1516), தாம்மசா கம்பனேல்லாவின் சூரிய நகரம் (1623) ஆகியவற்றை ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்.
[31] பயங்கர ஆட்சி: ஜாக்கொபின்வாதிகளின் புரட்சிகர ஜனநாயகச் சர்வாதிகாரம் நடைபெற்ற காலம் (1793 ஜுனிலிருந்து 1794 ஜுலை வரை). அப்போது பெரு முதலாளித்துவ அரசியல் பிரிவினரான ஜிரோண்டிஸ்டுகளும் முடியாட்சிவாதிகளும் தொடுத்த எதிர்ப்புரட்சிப் பயங்கரத்துக்கு ஜாக்கொபின்வாதிகள் புரட்சிகர பயங்கரத்தின் மூலம் எதிரடி கொடுத்தனர்.
[32] நெறியாளர் குழு: நெறியாளர் ஐவர் அடங்கிய குழு. ஆண்டுக்கு ஒருவர் வீதம் இவர்கள் மறுதேர்வு செய்யப்பட்டனர். 1794-இல் ஜாக்கொபின்வாதிகளின் புரட்சிகர சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்ட பின் 1795-ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டப்படி இந்த நெறியாளர் குழு ஃபிரன்சின் செயலாண்மை அதிகாரத்தை ஏற்றது. ஜனநாயக சக்திகளுக்கு எதிரான பயங்கர ஆட்சியை ஆதரித்தது. பெரு முதலாளிகளின் நலன்களுக்காகச் செயல்பட்டது. 1799-இல் போனபாட்டிஸ்டுகள் இவர்களின் ஆட்சியைக் கவிழ்த்தனர்.
[33]] சகோதரத்துவம்: 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஃபிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சியின் முழக்கமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார்.
[34] புதிய லானார்க்: ஸ்காட்லாந்து நகராகிய லானார்க்குக்கு அருகே 1784-இல் நிறுவப்பட்ட பருத்தி ஆலையும் கிராமமும்.
[35] நூறுநாள் போர்: பிரான்சுக்கு எதிரான ஆறாவது நேசக்கூட்டைச் சேர்ந்த ருஷ்யா, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரஷ்யா, முதலியவை நாடுகளின் சேனைகள் 1814 மார்ச் 31-இல் பாரிஸ் நகருக்குள் புகுந்தன. முதலாவது நெப்போலியனின் பேரரசு வீழ்ந்தது. நெப்போலியன் முடியிழந்து, எல்பாத் தீவுக்குக் கடத்தப்பட்டார். ஃபிரான்சில் பூர்போன் முடியரசு மீண்டும் ஏற்பட்டது. எல்பாத் தீவுக்குக் கடத்தப்பட்ட முதலாவது நெப்போலியன் 1815 மார்ச் 20-இல் பாரிசுக்குத் திரும்பியதைத் தொடர்ந்து அவருடைய பேரரசு மீண்டும் உயிர் பெற்றது. அன்று முதல் 1815 ஜுன் 22-இல் இரண்டாவது தடவை அவர் முடிதுறந்தது வரை நூறு நாட்கள் நடைபெற்ற போர் நூறுநாள் போர் எனப் பெயர்பெற்றது.
[36] வாட்டர்லூ வெற்றி: வாட்டர்லூவில் (பெல்ஜியம்) 1815 ஜுன் 18-இல் முதலாவது நெப்போலியனுடைய படை, வெல்லிங்டனின் தலைமையிருந்த கூட்டு ஆங்கில-டச்சுப் படைகளாலும் புளூஹர் தலைமை தாங்கிய பிரஷ்யப் படையாலும் தோற்கடிக்கப்பட்டது. இந்தப் போர் 1815-ஆம் ஆண்டுப் போர் நிகழ்ச்சிகளில் தீர்மானகரமான பங்காற்றியது. அது ஃபிரான்சுக்கு எதிரான ஏழாவது கூட்டணிக்கு (இங்கிலாந்து, ருஷ்யா, ஆஸ்திரியா, பிரஷ்யா, ஸ்வீடன், ஸ்பெயின் முதலிய நாடுகளின் கூட்டு) முழு வெற்றிக்கும், முதலாவது நெப்போலியனுடைய பேரரசின் தகர்வுக்கும் காரணம் ஆயிற்று.
[37] குழந்தைகளின் வேலைநேரம்: ஓவனின் முன்முயற்சியால் 1815 ஜூனில் நாடாளுமன்றத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அது 1819 ஜூலையில்தான் வெட்டிக் குறுக்கப்பட்ட வடிவில் சட்டமாக நிறவேற்றப்பட்டது. பஞ்சாலைகளில் 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு வைத்துக் கொள்ள இச்சட்டம் தடை விதித்தது. 18 வயத்துக்கு உட்பட்டோரின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என வரம்பு விதித்தது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் ஒன்றரை மணிநேரம் இரண்டு இடைவேளைகள் விடவேண்டும் என்றது.
[38] தொழிற்சங்கக் கூட்டமைப்பு: 1833 அக்டோபரில் லண்டனில், கூட்டுறவுக் கழகங்கள், தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் நடைபெற்றது. ஓவன் இதற்கு தலைமை வகித்தார். இதில், இங்கிலாந்து, அயர்லாந்து தேசியக் கூட்டுத் தொழிற்சங்கம் நிறுவப்பட்டது. இத் தொழிற்சங்கம் உற்பத்தி நிர்வாகத்தைத் தானே ஏற்றுச் சமாதான வழிகளில் சமுதாயத்தை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. முதலாளித்துவ சமூகமும் அரசும் கடுமையாக எதிர்த்ததால் 1834 ஆகஸ்டில் இந்த நிறுவனம் சிதைந்துவிட்டது.
[39] உழைப்புக் கடைவீதி: இங்கிலாந்தின் பல நகரங்களில் தொழிலாளர்களின் கூட்டுறவுக் கழகங்கள் ஏற்படுத்திய நியாய உழைப்புப் பரிவர்த்தனைச் சந்தைகளை (Equitable Labour Exchange Bazaars) ஏங்கெல்ஸ் இங்கு குறிப்பிடுகிறார். முதலாவது சந்தையை 1832-இல் ஓவன் நிறுவினார். முதலாளித்துவப் பண்டப் பொருளாதாரச் சூழ்நிலையில் பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்துகொள்ளும் இம்முயற்சி வெகுவிரைவில் தோல்வியடைந்தது.
[40] பரிவர்த்தனை வங்கி: 1848 – 49 ஆண்டுகளில் நடைபெற்ற புரட்சியின்போது புரூதோன் பரிவர்த்தனை வங்கியை அமைக்க முயன்றார். அவருடைய மக்கள் வங்கி 1849 ஜனவரி 31-இல் பாரிசில் அமைக்கப்பட்டது. முறையாக செயல்படத் தொடங்கும் முன்னரே, அது தோல்வியடைந்து ஏப்ரல் தொடக்கத்திலேயே மூடப்பட்டது.
(அத்தியாயம்-1 அடிக்குறிப்புகள் முற்றும்)